Socrates Drama by Kalaignar M. Karunanithi.
Sivaji Ganesan as Socrates.
Non Stop Performance.
சாக்ரடீஸ் நாடகம்
முதல் காட்சி
சாக்ரடீஸ்:
உன்னையே நீ அறிவாய்!!
உன்னையே நீ அறிவாய்!!
கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல
அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயலுவது புண்ணுக்கு புனுகு தடவு வேலையை போன்றது
அதனால் தான் தோழர்களே சிந்திக்க கற்றுகொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன்
அறிவு! அறிவு! அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்
உன்னையே நீ அறிவாய்!!
இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதர்க்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கிறேன்
ஏற்றமிகு ஏதன்சு நகர எழில்மிக்க வாலிபர்களே!
நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமிழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்!
வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால்
தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மட்டும் போதாது தீரர்களே
இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்து கொள்ளுங்கள்
அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி
மெலிடஸ்:
ஹஹ ஹஹ.. அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம்
குமுறும் எரிமலை கொந்தளிக்கும் கடல் இவைகளை விட பயங்கரமானவன் சாக்ரடீஸ்
அவன் தரும் அறிவாயுதம் கிரேக்கத்திலே தயாரகுமானால் நாமெல்லாம் தலை தூக்கவே முடியாது அணிடஸ்
என்ன சொல்கிறீர்
அணிடஸ்:
மெலிடஸ் நாம் கீறிய கோட்டை தாண்டாத இந்த கிரேக்க மக்களுக்கு அந்த கிழவன் அறிவுக்கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும்
மெலிடஸ்:
ஆமாம் அது தான் சரி
சாக்ரடீஸ் நீ கைது செய்யப்படுகிறாய் ம்..
இரண்டாம் காட்சி
மெலிடஸ்:
சாக்ரடீஸ்
அணிடஸ்:
நாட்டிலே நடமாடக்குடாத ஒரு ஆத்மா
ஜனநாயக அரசாங்கத்தை குறைகூறும் அந்த ஜந்து உடல் முழுதும் விஷம் கொண்டது
கேட்டார் பிணிக்கும் சொற்களால் கேளாரும் வேட்பமொழி வார்த்தைகளால் கேடு விளையும் கருத்துக்களை அள்ளி வழங்கி அரசாங்கத்துக்கு விரோதமாக ஆண்டவனுக்கு விரோதமாக சட்டத்துக்கு விரோதமாக இளைஞர்களை தூண்டிவிடும் இழிகுண கிழவன்
சாக்ரடீஸ்:
ம்ம்ம்ம்....
நீதிபதி:
என்ன சிரிப்பு!! என்ன காரணம்!!
சாக்ரடீஸ்:
ஒன்றுமில்லை தலைவா ஒன்றுமில்லை
ஆத்திரத்திலே அணிடஸ் தன்னை மறந்து என்னை பார்த்து கிழவன் என்று கேலி செய்கிறான் ம்ம்ம்ம் கேலி செய்கிறான் ம்ம்ம் அதை நினைத்தேன் சிரித்தேன்
கடல் நுரை போல் நரைத்துவிட்ட தலை எனக்கும் அணிடசுக்கும் இல்லையா சகோதரர்களே?
என்ன அணிடஸ் உண்மை தானே?
மெலிடஸ்:
சாக்ரடீஸ் வழக்கும் விசாரணையும் உங்கள் இருவரின் தலையை பற்றியதல்ல அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்
ம்ம்ம்ம் மிகவும் நன்றி மெலிடஸ் மிகவும் நன்றி
ஆனால் ஒன்று எண்சான் உடம்புக்கு தலையே பிரதானம் போல் இந்த வழக்கிற்கும் தலை தான் பிரதானம்
என் தலையிலே இருந்து சுடர்விட்டு கிளம்பும் அறிவு
அதை அழிக்க கவிஞனாகிய உன் தலையிலே இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனைகள் அரசியல்வாதி அணிடஸின் தலையிலே இருந்து பீறிட்டெழும் அதிகார ஆணவம்
இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனை போராட்டம் அதன் விளைவு தான் மெலிடஸ் இந்த வழக்கு
மெலிடஸ்:
பார்த்தீர்களா!! சட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான் இப்படித்தான் இளைஞர்களையெல்லாம் கெடுத்தான்
சாக்ரடீஸ்:
ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களை கெடுக்க முடியும்
நான் என்ன வாலிபருக்கு வலைவீசும் விலைமாதா
பருவ விருதளிக்கும் பாவையா
மெலிடஸ்:
ம் மாதரிடமில்லாத மயக்குமொழி
வாலிபருக்கு வலைவீசும் வனிதையரும் பெற்றிடாத வசீகர சொல்லலங்காரம் வார்த்தை ஜாலம் அடுக்கு தொடர் இப்படி பல மாயங்கள் கற்றவர் நீர்
சாக்ரடீஸ்:
மந்திரவாதி என்றுகூட சொல்வாய்
அன்புள்ள இளைஞனே ஏதன்சு நகரிலே நான் ஒருவன் மட்டும் தான் இளைஞர்களை கெடுக்கிறேன் அப்படித்தானே
மெலிடஸ்:
ஆமாம்
சாக்ரடீஸ்:
நீ கெடுக்கவில்லை
மெலிடஸ்:
இல்லை
சாக்ரடீஸ்:
அணிடஸ்
மெலிடஸ்:
இல்லை
சாக்ரடீஸ்:
டித்திலைகன்
மெலிடஸ்:
இல்லை
சாக்ரடீஸ்:
இந்த நீதிபதி
மெலிடஸ்:
இல்லை
சாக்ரடீஸ்:
யாருமே இளைஞர்களை கெடுக்கவில்லை எல்லோருமே இளைஞர்களுக்கு நன்மையே செய்கிறார்கள் என்னை தவிரஅப்படித்தானே
மெலிடஸ்:
ஆமாம் ஆமாம்
சாக்ரடீஸ்:
ஹஹஹா அத்தனை பேரும் ஏன் ஏதன்சு நகரமே அவர்களை திருத்தும்போது நான் ஒருவன் எப்படியப்பா அவர்களுடைய பாதையை திருப்ப முடியும்?
அணிடஸ்:
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
சாக்ரடீஸ்:
ஏன் இப்படியும் சொல்லலாமே இருண்ட வீட்டிற்க்கு ஒரு விளக்கு
என்ன மெலிடஸ் திகைக்கிறாய்
சபையோர்களே! வாலிபர்கள் என்னை சுற்றி வானம்பாடிகள் போல் வட்டமிட காரணம் என்னுடைய வார்த்தை அலங்காரமல்ல வளம் குறையா கருத்துக்கள் தரம் குறையா கொள்கைகள் இந்த தரணிக்கு தேவையான தங்கம்நிகர் எண்ணங்கள் ம்ம்ம்ம்...
அழகுமொழியால் அலங்கார அடுக்குகளால் அரும்பு உள்ளங்களை மயக்குகிறேன் என்று சொல்கிறார்களே அவர்களை நான் கேட்கிறேன்!
அந்த மொழி எனக்குமட்டும் சொந்தமல்லவே
அவர்கள் அதை பேசக்கூடாது என்று நான் தடை போட்டது கிடையாதே
பேசிப்பார்க்கட்டுமே அவர்களும் ஆம் பேசித் தோற்றவர்கள் ம் பேசி தோற்றவர்கள்
நீதிபதி:
சாக்ரடீஸ் பேச்சை நிறுத்தும் விளக்கம் தேவையில்லை
இந்த நீதிமன்றத்தின் அதிகப்படியான உறுப்பினர்களின் வாக்களிப்பின்படி நீர் விஷம் சாப்பிட்டு மரணதண்டனைக்கு ஆளாக வேண்டுமென்று தீர்ப்பளிக்கிறேன்
மூன்றாம் காட்சி
சாக்ரடீஸ்:
பார்த்தாயா பயனற்ற தத்துவ விசாரணையில் காலத்தை கழிக்கிறேன்
வீண் வாதம் புரிந்து தொல்லை படுகிறேன் என்றெல்லாம் கோபித்து கொண்டாயே
இப்போது பார் உனது கணவன் அகிலம் புகழும் வீரனாக
தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான்
அன்புள்ள எக்ஸ்சேந்துபி நீ மிகவும் பாக்கியசாலி
பணபலம் படைபலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்குமே பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப்போகும் இந்த கர்ம வீரனுக்கு நீ மனைவி ஹஹஹா...
குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துகொள்
அவர்கள் பெரியவர்களாக மாறியதும் நேர்மை தவறி நடப்பார்களேயானால் நான் உங்களை திருத்த முயன்றதுபோலவே நீங்களும் அவர்களை திருத்த முயலுங்கள்
நேரமாகிறது காவலர்கள் கோபிப்பார்கள் நீ போய் வா
கிரீடோ இவர்களை அனுப்பி வை
கிரீடோ உனக்கு தெரியுமல்லவா இன்றோடு முப்பதுநாள் சிறைவாசம் முடிந்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விஷம் சாப்பிட்டு சாக வேண்டிய நாள் இதுதான்
கிரீடோ:
அருமை நண்பா
சாக்ரடீஸ்:
அழாதே அதோ வந்துவிட்டது அமுதம்
சிறைக்காவலா இதை என்ன செய்யவேண்டும் முறைகளை சொல்
சிறைக்காவலன்:
பெரியவரே விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும்
பிறகு இங்குமங்கும் நடந்துகொண்டே இருக்க வேண்டும்
கால்கள் மறத்து போகும் வரையிலே அப்படியே நடக்க வேண்டும்
பிறகு உட்காரலாம் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டு கொண்டே வரும் பிறகு படுத்துவிட்டால்
சாக்ரடீஸ்:
ஆனந்தமான நித்திரை
கனவுமங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை
சிறைக்காவலா கொடு இப்படி
கிரீடோ:
நண்பா சிறிது நேரம் பொறுத்துக்கூட சாப்பிடலாம்
சிறைச்சாலையிலே அதற்க்கு அனுமதி உண்டு
சாக்ரடீஸ்:
ம்ம்ம்... ஹ ஹ.. கிரீடோ கிரீடோ உனக்கு மிகமிக அற்ப ஆசை மிகமிக அற்ப ஆசை
இந்த விஷத்தை நான் இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்து கொள்
அதற்குள் என் இருதயம் வெடித்து நான் இறந்தது விட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றது?
புதிய சாக்ரடீஸ்ஆ பிறந்து வரப்போகிறான் கூடாது கூடாது
இப்போதே சாப்பிட்டு விடுகிறேன்
கிரீடோ இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல இந்த உடலைத்தான்
கிரீடோ:
ஏதன்சின் எழுச்சிமிக்க சிங்கமே எங்கள் தங்கமே கிரேக்க பெரியாரே
உம்மையும் எம்மையும் இந்த விஷம் பிரிக்கபோகிறதா ஐயகோ நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறதே
நண்பா எனக்கு கடைசியாக ஏதாவது சொல்லு
சாக்ரடீஸ்:
புதிதாக என்ன சொல்லப்போகிறேன்
உன்னையே நீ எண்ணி பார்!
எதையும் எதற்க்காக? ஏன்? எப்படி? என்று கேள்
அப்படி கேட்டால்தான் இந்த சிலைவடிக்கும் இந்த சிற்பி சிந்த்தனை சிற்பியாக மாறினேன்
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம்
எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப்பார்பாய்
அதைத்தான் உனக்கும் இந்த நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புவது
விஷம் அழைக்கிறது என்னை
இந்தக்கிழவன் கிரேக்க நாட்டு இளைஞர்களை கெடுத்ததாக யாராவது உண்மையாக உளமாக நம்பினால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும் அவர்கள் என்னை மன்னிக்கட்டும்
வருகிறேன் வணக்கம்! ஏ ஜகமே! சிந்திக்க தவறாதே!
உன்னையே நீ அறிவாய்! உன்னையே நீ அறிவாய்! வருகிறேன்.